25.11.07

வலைப்பூ தொடங்கிய கதை

இஞ்சினியரிங் முடித்தவுடனேயே சென்னைக்கு மூட்டைகட்டிக்கிட்டு கிளம்பி வந்தாச்சு.வந்தாரை வாழவைக்கும் சென்னை என்னை மட்டும் கண்டுகொள்ளாமல் நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்தது.கடைசியில் இங்கே வா நண்பா நான் இருக்கிறேன் உனக்கு அள்ளித்தர என ஐதராபாத் அழைக்க அடுத்த நிமிடமே யோசிக்காமல் ஒத்துக்கொண்டேன்.ஏதோ தைரியத்தில் கிளம்பி வந்துவிட்டேன்.தமிழ்தான் நமக்கு கைவந்த கலையாச்சே.ஆங்கிலமோ சமாளிக்கும் அளவுக்கு போதுமானதாக இருந்தது.தெலுங்கில் எனக்கு தெரிந்த ஒரே வார்த்தை தெலுங்கு என்பது மட்டும்தான்.இந்தி மொழியோ கிலோவுக்கு எவ்வளவு நிற்கும் என கேட்கும் ஆள்.ஒருவழியாக ஐதராபாத்துக்கு வந்து ஒரு ஆண்கள் விடுதியில் செட்டிலும் ஆயாச்சு.ஆனால் நமக்குதான் எங்கே போனாலும் சனிபகவான் சுத்திசுத்தி அடிப்பாரே.சென்னையிலிருந்து கிளம்பி என் பின்னாலேயே ஐதராபாத்தும் வந்துவிட்டார்.எனக்கு ஒதுக்கப்பட்ட அறை இருவர் தங்ககூடியது.அதில் ஏற்கனவே ஒரு ஆந்திர நண்பர் தங்கியிருந்தார்.நான் வருவதற்கு முன்னால் ரொம்பநாளாக தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்திருப்பார் போலிருக்கிறது.அறைக்குள் நுழைந்தவுடனேயே முதல் பார்வையிலேயே ஏதோ தெலுங்குபட ஹீரோ வில்லனை முறைப்பதுபோல் கோபப்பார்வை பார்த்தார்.ஒருவழியாக சமாளித்து ரூமில் ஒருவாறாக செட்டிலாகிவிட்டேன்.அடுத்துவந்த நாட்களிலும் என்னை தவிப்பதிலேயே கவனமாக இருந்தார்.நானும் முதல் மூன்று நாட்கள் புதிய வேலை,புது அலுவலகம் என சற்று பிஸியாக இருந்ததில் ஓடிவிட்டது.அன்று சனிக்கிழமை.வார விடுமுறை நாள்.நம்ம சனி பகவானுக்குதான் ரொம்பவும் பிடித்த நாளாயிற்றே.. வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.நமது அறை நண்பருக்கும் அன்று விடுமுறை.வேறுவழியே இல்லை.இன்னும் 48 மணி நேரத்துக்கு அவருக்கோ அல்லது எனக்கோ நேரம் சரியில்லை.பிள்ளையார் சுழிபோட்டு நானே பேச்சை ஆரம்பித்தேன்.பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு அவர் MCA முடித்து இப்போது ஒரு பிரபலமான MNC யில் பணியாற்றுவது தெரிந்தது.எனக்கோ பேச்சுதுணைக்கு நமது துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவரே கிடைத்த நிம்மதி.எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு அவரை ஒரு அரைமணி நேரத்துக்கு பாடாய்படுத்திக் கொண்டிருந்தேன்.அவர் நேரம் நல்லநேரம் போல.அவரது செல்போனில் ஒரு அழைப்புவர செல்போனை கையில் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர்தான்.அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆளையே கண்ணில் பார்க்க முடியவில்லை.நள்ளிரவில் வந்து தூங்கிவிட்டு காலையில் நான் கண் விழிப்பதற்கு முன்னாலேயே காணாமல் போய்விடுவார்.இரண்டு வாரங்களாக இது தொடர்ந்தது.வார நாட்களிலும் அலுவலகம் முடிந்து வந்தபிறகு இரவில் ஒன்று தலைவலி என காரணம்கூறி விரைவில் தூங்கிவிடுவார் அல்லது தூங்குவதுபோல நடிப்பார்.நானோ விக்கிரமாதித்தன் தோளில் தொங்கும் வேதாளம் போல விடாது கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தேன்.அவரோ வாலி படத்தில் அஜீத் கேரக்டர் நியாபமிருக்கிறதா? தான் ஊமை எதிரேயிருப்பவருக்கு தெரியக்கூடாது என வாயில் சிக்லெட்ஸ் போட்டு மென்றுக்கொண்டே ம்.. ம்.. என சொல்லுவார்.நமது அறை நண்பரும் ஒரு கட்டத்திற்கு பிறகு அதே பாணியைத்தான் கையாண்டார்.என்ன இங்கே சிக்லெட்ஸ்க்கு பதிலாக மெண்டோ ஃபிரெஸ்.எனக்கோ உலகமே வெறுத்துவிட்டது.என்னடா நம்ம அவ்வளவு மோசமாகவா ஆங்கிலம் பேசுகிறோம் என்ற கவலைவேறு தொற்றிக்கொண்டது.அந்த குழப்பங்களுக்கெல்லாம் அந்தவார இறுதியில் விடைகிடைத்தது.அன்று சனிக்கிழமை.காலையிலிருந்தே நண்பர் மிகவும் பரபரப்பாக இருந்தார்.விஷயம் வேறொன்றுமில்லை.நமது நண்பருக்கு அன்று ஒரு இண்டர்வியூ.அதுவும் எப்படி? தொலைபேசிவழியாக நடந்தது.எனக்கும் ரொம்ப போரடித்ததால் அந்த இண்டர்வியூவை உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.முதல் 5 நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது.நண்பரின் ஆங்கிலப்புலமை.தமிழ் மீடியத்தில் படித்துவந்த நாமெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.அப்படியிருந்தது அவரது ஆங்கிலபுலமை.(நண்பர் ஆங்கில மீடியத்தில் படித்தவராம்)ஓ இதுதான் விஷயமா? இதற்காகத்தான் தினமும் மெண்டோ ஃப்ரெஸை மென்று தள்ளுகிறார் என்பதும் நமது அறிவுக்கு சற்று தாமதமாகவே புலப்பட்டது.சரி அவரை ஏன் கஷ்டப்படுத்தனும்னு ஒருமூன்று நாள் எதையும் கேட்காமல் அமைதியாக இருந்தேன்.ரொம்பவும் போரடிக்கவே கடைசியில் லேப்டாப்பிற்கு இண்டர்னெட் கனெக்ஷனும் வாங்கிவிட்டேன்.ஊரைவிட்டு 800 கிலோமீட்டர் தள்ளி வந்ததாலேயோ என்னவோ தெரியலை.. இந்த தடவை தமிழ்மேல் அவ்வளவு ஈர்ப்பு.கூக்லி நண்பரின் துணைகொண்டு தேடிக்கொண்டே இருந்ததில் கடைசியாக வலைப்பூக்களுக்கு ஒரு இணைப்புபாதையை காட்டினார்.சென்னையில் இருந்தப்பவே இந்த வலைப்பூ பக்கங்களில் எனக்கு அறிமுகம் இருந்தபோதிலும் அவ்வப்போது வந்து என்ன நடக்கிறதென்று எட்டிப்பார்த்துவிட்டு போவதோடு சரி.நம்மளும் சொந்தமாக ஒரு வலைப்பூ உருவாக்கலாம்னு மனசில் இருந்த திட்டம் சோம்பேறித்தனத்தால் நீண்டநாளாக நிறைவேறாமல் இருக்கும் சேலம்-கரூர் அகல ரயில்பாதை கணக்கா(அப்பாடா பப்ளிக்குக்கு ஒரு மெசேஜ் சொல்லியாச்சு. ரைட்டா சிபி அண்ணா) இழுத்துக்கிட்டே போய்க்கிடிருந்தது.கடைசியில் அறைநண்பரை அதற்குமேல் கஷ்டப்படுத்த விரும்பாமல் மளமளவென வேலைகளைத் தொடங்கி வலைப்பூவையும் ஆரம்பித்து தினமும் பதிவுகள் போடவும் ஆரம்பித்துவிட்டேன். இந்த பதிவுகளால் நீங்கள் பயனடைகிறீர்களோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் இந்த வலைப்பூ ஆரம்ம்பிப்பதற்கான தொடக்ககட்ட வேலைகளில் இருக்கும்பொழுதே இதனால் பலனடைந்த ஒரு உடனடி பயனாளியை நேரில் பார்த்தேன்.அவர் வேறு யாருமல்ல என் அறை நண்பர்தான்.ஆம் எனது அறைநண்பர் இப்போது தூங்கும்பொழுதுகூட சிரித்துக் கொண்டேதான் தூங்குகிறார். மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை அவருக்கு.பின்னே இருக்காதா? தினமும் பதிவுகள் போட டைப்செய்ய ஆரம்பித்ததிலிருந்து நான்தான் அவரை ஏதும் கேள்விகேட்டு தொந்தரவு செய்வதில்லையே? ஒருநாள் அவர் ஆவலை அடக்க முடியாமல் என்ன எப்போதும் டைப் செய்து கொண்டேயிருக்கிறாய் எனக்கேட்க பொறுமையாக வலைப்பூ பற்றி எடுத்துக்கூறினேன்.புரிந்ததோ இல்லையோ பலமாக தலையாட்டிக் கொண்டிருந்தார்.
பின்குறிப்பு -- அடுத்தநாள் காலை விடிந்ததும் குளித்துவிட்டு முதல் வேலையாய் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு போய் அர்ச்சனை செய்துவிட்டு வந்தார்.(ஒருவேளை வலைப்பூவை உருவாக்கி அவர் கஷ்டத்தை போக்கியதற்காக கூக்லி பேரில் அர்ச்சனை செய்திருப்பாரோ...)
எது எப்படியோங்க நம்மால் ஒரு நான்குபேர் கவலைகளை மறந்து ஒரு 2 நிமிஷம் சந்தோஷமாக இருந்தால் அதுவே நமக்குப்போதும். என்ன நான் சொல்றது?

No comments: