சரி எழுதணும்னு வந்தாச்சு.எழுத்தாளன் அப்படின்னா ஒரு புனைப்பெயர் இருக்கணும்ல.. சரி ஊர்பேரை போடலாம்னா சிபி அண்ணன் கொலைவெறியோடு மவனே! ஊர்ப்பக்கம் வந்துபார்ரா.. உனக்கு இருக்கு.ன்னு துரத்துவாரு. அதனால் கடைசியா நின்னுக்கிட்டு,உட்கார்ந்துகிட்டு,படுத்துக்கிட்டு... இன்னும் எப்படியெல்லாமோ யோசிச்சு கண்டுபிடிச்சது இந்தப் பெயர். இந்த பக்கோடா என்ற பெயர் கல்லூரி நாட்களில் ஒருசில மாதங்களுக்கு எனது ஒரிஜினல் பெயரை மறக்கடிக்கும் அளவுக்கு கொடிகட்டி பறந்தது.அந்த காமெடியை நீங்களும் கேட்டு பிடிச்சு தொலைச்சுதுன்னா ஒரு பின்னூட்டத்தைப் போட்டுவையுங்க.. பிடிக்கலைன்னா அட கருமமே என்ன இது பினாத்தல்ன்னாவது திட்டி ஒரு பின்னூட்டத்தைப் போட்டு வையுங்கண்ணா....
நான் ஒரு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறையில்(தமிழ்படுத்தியது சரியாங்ண்ணா...) ஒரு பொறியியல் பட்டதாரி.கல்லூரி நாட்களின் முதல் மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளைப் பொருத்தவரைக்கும் நான் ரொம்பவே நல்லப்பையன்.(அட நிஜமாத்தாங்க..).ஏதோ பழம்,சொம்பு அப்படியெல்லாம் நல்லப் பசங்களைச் சொல்லுவோமே.. அப்படித்தான் நானும் இருந்தேன்.மூன்றாம் ஆண்டின் இறுதியில் மச்சான் என்னடா இப்படியிருக்கே?.. ஒவ்வொருத்தனையும் பாரு.. எப்படியெல்லாம் என்ஜாய் பண்றானுங்க..காலேஜ் லைஃப்பையே நீ வேஸ்ட் பண்றடான்னு அறிவுரை ஆற்றிய ஒரு நல்ல நண்பனின்(?) பேச்சைக்கேட்டதால் வந்தவினை.என்னடா இப்படி சொல்றாங்களேன்னு மூளைக்கு ஓவர்லோடு வேலை கொடுத்து யோசித்துக் கொண்டிருந்த பொழுதே மார்கழி மாதத்தின் பனிகொட்டிய ஒரு சுபயோக சுபதினத்தில் இரவு 10 மணிக்குமேல் மொட்டைமாடியின் நிலவொளியில் பியரை காட்டி இதெல்லாம் இப்போ கூல்டிரிங்ஸ் லிஸ்ட்டில் சேர்ந்திருச்சு நண்பா.. என ஊற்றிக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டான் ரூம்மேட்டாக தங்கியிருந்த இன்னொரு நண்பன்(குருன்னு சொன்னா சரியா இருக்குமா?). அந்த முதல் அனுபவத்தை எல்லாம் பின்னால் இன்னொரு தொடரில் சொல்கிறேன்.டிராக் மாறுகிறமாதிரி இருக்கு.. மெயின் டிராக்குக்கு போவோமே..
அது கல்லூரி படிப்பின் கடைசி வருடம்.பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குரிய நல்ல பழக்கங்களில்(?) ஒன்றிரண்டை கற்றுக்கொண்டு நானும் இப்பொழுது முழு மாணவனாக மாறியிருந்தேன். இப்பொழுது நான் வேறுஅறைக்கு மாறியிருந்தேன்.6 பேர் இருந்த பெரியவீடு அது.அதில் நால்வர் என் வகுப்புதோழர்கள்.மற்றொருவர் வேறு துறையைச் சார்ந்தவர்.வயதிலும் மூத்தவர். ஏற்கனவே பணியாற்றிவிட்டு படிப்பின்மேல் இருந்த தீராத காதலால்(!) நேரடியாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவர்.எனக்கு அவ்வளவாக பழக்கமில்லாதவர் என்பதாலும்,வயதில் மூத்தவர் என்பதாலும் நான் அவரிடம் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருந்தேன்.அந்த 2 மாதத்தில் ஏதாவது அவராக கேட்டால் ஆம்,இல்லை என்பதைத்தவிர அதிகம் பேசியதாக நினைவில்லை.அவரை உடன்பயிலும் ஒரு மாணவியுடன் இணைத்து ரூமிலுள்ள அனைவரும் கலாய்க்கும்போதும்கூட சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கிட்டிருப்பேன்.ரூமுக்கே தலைன்னு வைச்சுக்ங்களேன்.. அவருக்கு அவரின் பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர் ரமேஷ். நண்பர் கூட்டத்தில் வைக்கப்பட்டதோ "மச்சி". எனது நினைவுக்கு எட்டியவரை இன்றளவும் அவரை யாரும் ரமேஷ் என்று சொல்லிக் கூப்பிட்டுக் கேட்டதில்லை.இப்படியே போய்க் கொண்டிருந்தபோது 5வது செமஸ்டரின் முடிவுகள் வந்தன.ரூமில் எல்லோரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்க அந்த மகிழ்ச்சியை அன்று கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எனக்கோ உள்ளூர பயம்.ஏனென்றால் ஏதோ ஆசைக்கு சில பழக்கங்களை பழகியிருந்தாலும் இதுவரைக்கும் பெரிய தலைகளுடன் சபையில் அமர்ந்து அருந்தியதில்லை. ஏன் யோசிச்சேன்னா நம்ம கேரக்டர்படி சும்மாவே கொஞ்சம் நகைச்சுவையான ஆளு. இதுல கொஞ்சூண்டு சரக்கு உள்ளே போயிடுச்சின்னா அம்புட்டுதேன்.. கைப்புள்ள வடிவேலு கணக்கா அலம்பலை ஆரம்பிச்சுடுவோம்ல... அதேன்.. இவங்ககூட குறிப்பா மச்சிகூட உட்கார்ந்து வழக்கம்போல நம்ம அலம்பலை காட்டப்போய் ஒண்னுகிடக்க ஒண்ணு ஆயிப்போச்சுன்னா அப்படிங்கிற பயம்தேன்.ஒருவழியாக மச்சியே தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி இதில் என்னப்பா இருக்கு? சபைன்னு வந்ததுக்கப்புறம் எல்லாருமே ஒண்ணுதான்.இதிலே என்ன வயசு வித்தியாசம்லாம் பார்த்துக்கிட்டு இருக்கே? நான் ஒன்றும் தப்பா நினைச்சுக்க மாட்டேன் வா..அப்படின்னு பெரிய லெக்சர்லாம் கொடுத்து தயக்கத்தைப் போக்கி அழைத்துச்சென்றார்.நானும் நேர்ந்துவிட்ட பலியாடு போல் அவர்பின்னால் நடக்கத் துவங்கினேன்.
விதி வலியது என்பார்கள். ம்ம்... விதியை யாரால் மாற்றமுடியும்?
(தொடரும்)
25.11.07
புனைப்பெயர்(பக்கோடா) வந்த கதை-1
பதித்தது பக்கோடா at 7:58 pm
Labels: புனைப்பெயர்(பக்கோடா) வந்த கதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment