25.11.07

புத்தகங்கள்

எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு.அதாவது எப்போது சாப்பிட அமர்ந்தாலும் ஒருகையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும்.அது வார,மாத இதழாகவோ அல்லது எதுவும் கிடைக்காதபொழுது ஒரு வருடத்துக்கு முற்பட்ட செய்தித்தாள்களைக் கூட வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன்.இந்த பழக்கம் எந்த வயதில் ஆரம்பித்தது என சரியாகத் தெரியவில்லை.ஆனால் இன்றளவும் இந்த பழக்கத்தை விடமுடியாமல் வீட்டில் சாப்பிட அமர்ந்தால் தொடர்கிறேன்.அம்மாவும் ஆரம்பத்திலிருந்தே அன்பாக,வேண்டுகோளாக கொஞ்சம் அதிரடியாக கூட மிரட்டிப் பார்த்துவிட்டார்கள். எனது ஒல்லியான உடல்வாகை காரணம்காட்டி நீ சாப்பிடும்போது கையில் புத்தகம் இல்லாமல் சாப்பாட்டில் கவனம் வைத்து சாப்பிட்டு பார்.ஒரே மாதத்தில் குண்டாகிவிடுவாய் என கஷ்டப்பட்டு யோசித்து புதுபுது கதைகளாக கூட சொல்லிப் பார்த்தார்கள். ம்ஹீம்.. பிரயோஜனமில்லை..அவர்களுக்கே அலுத்துப்போய் இவன் சரிப்பட்டு வரமாட்டான் என தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.இப்போதெல்லாம் வீட்டில் சாப்பாட்டு நேரத்தில் தட்டில் சாப்பாட்டைப் போட்டுவிட்டு அவர்களாகவே இந்த புத்தகம் இந்த வாரம் வாங்கியது இங்கேயிருக்கிறது என புத்தகம் இருக்குமிடத்தையும் சொல்லிவிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்பினால் நம்புங்கள்.எனக்கு முதன்முதலில் புத்தகங்களுடன் பரிச்சயம் ஏற்பட்ட வயது 5.அப்போது பிரபலமாக இருந்த சிறுவர்மலர்,கோகுலம்,பூந்தளிர்,ரத்னபாலா,அம்புலிமாமா என ஆரம்பித்த எனது புத்தகதாகம் 10 வயது வரைக்கும் அவைகளுடனேயே தொடர்ந்தது.பின்னர் ஹைஸ்கூல் சேர்ந்தவுடனேயே எனது புத்தகஅறிவு விரிவடைந்து ஆனந்தவிகடன்,குமுதம்,குங்குமம் என தொடர ஆரம்பித்தது.இப்படியே ஒரு இரண்டு வருடங்கள் ஓடியபிறகு எனக்கு நாவல்கள் அறிமுகமாகின.அதிலும் குறிப்பாக துப்பறியும் நாவல்கள்.ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா ஆகியோரின் எழுத்துநடை கண்டு வியந்துபோவேன்.நம்ம இந்திரா சௌந்திரராஜன் கொஞ்சம் லேட்டாகத்தான் அறிமுகமானார்.லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த நம்ம தலைவர் மாதிரி ஒவ்வொரு நாவலிலும் சும்மா கலக்கியிருந்தார்.இன்றைக்கு வரைக்கும் இவரின் எந்த நாவலை படிக்க ஆரம்பித்தாலும் முழுநாவலையும் ஒரேமூச்சில் படித்துவிடுவேன்.அவ்வளவு அற்புதமான எழுத்துநடை கொண்டவர்.சமீப காலங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் என்னை மிகவும் கவர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.இவரின் துணையெழுத்து படித்தபோது சில இடங்களில் மனதை பிழியவைத்து விட்டார்.
இனிவரும் பதிப்புகளில் நான் இதுவரை படித்த புத்தகங்களிலிருந்து என்னைக் கவர்ந்தவை பற்றி இங்கே பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.

3 comments:

கார்த்திக் பிரபு said...

edho ennai aprthu arambicheengannu peela utrukeenga pola ?? :)

பிரேம்ஜி said...

நல்லா எழுதியிருக்கீங்க. நிறைய எழுதுங்க. "வார்த்தை சரிபார்த்தல்"
(Word Verification) முறையை நீக்கிவிட்டால் விரைவாக பின்னூட்டமிடலாம்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in